Thursday, July 21, 2005

ஒன்பதாவது முடிச்சு!

"என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது.

ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள்.இத்தனைக்கும் யாழ்நகரில் எங்கையே ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இப்படி வாழும் ஒரு தமிழ்ப்பெண். பிறப்பில் கூட அவளிற்கு சோதனை தான். தாயையும் வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டையும் கொண்டு அவள் வெளியில் வந்தாள் என்று அடிக்கடி பேசுவார்களாம். ஆனந்தி பிறந்த போது வீட்டில் நின்ற பசுமாடும் பிரசவத்தில் தாயும் இறந்து போய்விட. "அவளிறக்கு தாயை விழுங்கியவள்" என்ற பட்டப்பெயர் கூடவே வந்து சேந்து விட்டது. சற்று வித்தியாசமானவளாக பார்க்கப்பட்டாள். தந்தைக்கு மனைவியாய் வீட்டிற்கு சித்திவர அவளது நிலை இன்னும் பாரதூரமானது. வெளியுலகம் வெறுமையாய் அவளிற்கு. வெளியிலே செல்ல தடை பாதி என்றால், போக்கிடம் தெரியாமல் வீட்டினிலே அடைபட்டது பாதி. காலங்கள் காத்திருக்கவில்லை பருவவயதை அடைந்து விட்டாள். "எவனை முழுங்க இவள் பெரிசானாளோ" தந்தையின் காதுப்பட சித்தி குத்திச்சென்றாள், தந்தை சித்திதாசனாய். தான் அப்படிப்பட்டவளா? அதிஸ்டம் இல்லாதவளா? என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்ள தவித்தாள். தனிமையில் எங்கோ ஒரு மூலையில் தவித்திட்டிருந்தவளை மச்சான் சீலன் ஆற்றினான். பருவமடைந்த புதிசு வேறை சீலனை கவர்ந்திழுத்திருக்கிறாள், இருவரும் காதல் கொண்டனர்.

ஆநாதரவாய் இருந்தவளிற்கு ஓரே ஒரு ஆதரவு சீலன் தான். சீலன் வேறு யாரும் அல்ல ஆனந்தியின் தாய் மாமன் மகன். சீலன் வீட்டில் கரையேற வேண்டிய இரண்டு பெண்கள் கரையேற்ற அவன் விலைமாடாய் நின்றான். அவனிற்கு அத்தனை விலை கொடுத்து ஆனந்திக்கு கணவனாக்க. ஆனந்திவீட்டில் வசதியும் இருக்கவில்லை மனமும் இருக்கவில்லை.

இளமை செய்த வேகம் ஒரு நாள் இருவரும் ஓடிச்சென்று விட்டார்கள். அதன் பின்ன அவளிற்கு "ஓடுகாலி" ஆனந்தி என்ற பெயர் தான் பிரபல்யமானது. இருவரது வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்ட புது ஜோடிகள். அருகிலேயே சீலனின் நண்பன் வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்தனர். கூலித்தொழில் தான் சீலன் செய்தான். அவள் சந்தோசமாய் வாழ்ந்தாள். குத்தல் இல்லை, நொட்டை இல்லை, சுதந்திரமாய் கால்வயிறு கஞ்சி கிடைச்சால் போதும் என்பது அவள் நிலை. காலம் கரைந்தோடியது, ஆனந்தி ஒரு குழந்தைக்கு தாயானாள் அவளது 19 தாவது வயசில். சீலன் வீட்டார் வலிய வந்து ஒட்டிக்கொண்டனர் பேரப்பிள்ளை என்ற சாட்டோடு. (அவர்களிற்கு அவன் தானே ஆதாயம்) ஆனந்திவீட்டார் ஒதுங்கியே இருந்தனர் ஓடுகாலி என்ற வெட்டோடு. (சீதனம் இன்னும் கொடுக்கப்படவில்லையே)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எல்லாம் போயாச்சு. கலியாண வயசை தாண்டிய அக்கா. வயசை நெருங்கிய தங்கை. இருவரையும் காணுகையில் தான் செய்தது தப்பு என்று சீலனுக்கு புலப்படத்தொடங்கியது. வாய் வார்த்தையால் அவளை சாடத்தொடங்கியவன். சாட்டையால் அடிப்பது வரைக்கும் சென்று விட்டான். இரண்டொரு முறை அடிச்சு கலைச்சும் இருக்கிறான். தாய் வீடு என்று சென்றால் அங்கு தாய் இல்லை சித்திதாசன் தகப்பன், என்ன செய்யமுடியும்?. சுவரில் எறிந்த பந்து போல மீண்டும் அவனிடமே வந்து விடுவாள். இடர்களிற்கிடையில் இன்னொரு பெண் குழந்தை உலகை தொட்டுவிட்டாள்.

"அடி உதை பழகிவிட்டது, அடுப்பிற்கு வாழ்க்கைப்பட்டா நெருப்போடு வாழ்ந்து தானே ஆகவேணும்" அனுபவித்தாள். பிரச்சனை வேறுவிதமாய் சென்றது. வாடகைக்கு வீடு கொடுத்த நண்பன் சீவாவுடன் ஆனந்தியை தொடர்பு படுத்தி புதிய பிரச்சனையை தொடக்கிவிட்டான் சீலன். அதுவரை அப்படி ஒரு எண்ணமே அவளுள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவனது சித்திரவதையை தாங்கியதே அவளுக்கு வேலையாச்சு. சிவாவும், சீலணும் சிறுவயசு நண்பர்கள் ஒன்றாய் வேலைக்கு சென்று ஒன்றாய் வீடுவருவார்கள். இதற்குள் அவன் வீட்டை வந்து சென்றான் என்பான். இரவும் பகலும் வேதனை, சிவாவும் இதை தெரிந்தும் தெரியாததும் போல நடந்து கொண்டான். "இந்த தொல்லை வேண்டாம் நாங்கள் வீட்டை மாறுவம்" என்றவளை. "ஏன்டி அங்க எவனாவது இருக்கிறானா?" என்று உதைப்பான் , துடிதுடித்துப்போவாள். அவனது வீட்டில் இருந்தும் எந்த ஆதரவும் இல்லை. வேண்டா பெண்டாட்டி மட்டும் அல்ல அவள் வேண்டா மருமகளும் கூட.

அன்று அவளது வாழ்வில் பெரிய திருப்புமுனையாய் போனது, குழந்தைகளுடன் மாரடிச்சு ஒரு கறியும் சோறும் வைச்சிட்டு சீலன் என்ன இடியோட வாறானோ என்று ஏங்கிக்காத்திருந்தாள், அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. முழுவெறியோடு வந்து கறிச்சட்டியை தலையில் வைத்தான். வீட்டு மூலையினுள் போட்டு உதைத்தான். இன்னும் கொஞ்சம் ஏத்துவதற்காய் மீண்டும் வெளிக்கிட்டு போனான். அவன் செய்து விட்டு போன அபிசேகத்தை கழுவிவிட்டு அழுத குழந்தையை பால் கொடுத்து கிடத்திவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி தலை விதியை நினைத்து அழுதவளை ஒரு கை தொட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்.

முன்னால் நிண்டது சிவா, "பயப்பிடாதேங்கோ இதுவரை உங்கட முகத்தை கூட நான் பாத்ததில்லை, ஆனா பிறந்த அவனுக்கு பிறந்த குழந்தையை கூட சந்தேகப்படுற அளவிற்கு சீலன் போட்டான், இனி இவனோட வாழ்ந்து என்னத்தை காணப்போறியள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னோட வாங்கோ, எங்கையாவது கண்காணத இடத்திற்கு கொண்டு போய் உங்கள கண்கலங்காமல் வைச்சுக்காப்பாத்திறன், இப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரை இருந்ததில்லை சோத்துப்பானை வெளியில வந்த வேகத்தில எட்டிப்பாத்தன் சுடுகறிச்சட்டி தலையில வந்ததை, அந்த கணம் எனக்கு இப்படி கேக்க தோன்றியது, தப்பிருந்தா மன்னிச்சுக்கொள்ளுங்கோ, உங்களுக்கு விருப்பம் என்றால் யோசிச்சு சொல்லுங்கோ, சத்தியமாய் இப்படி ஒரு இழிஞ்ச மனிசனாய் ஒரு நாள் கூட நான் இருக்கமாட்டன்". என்றான். சட்டென அந்த நொடி அவளிற்கு தோன்றியது. அவனோட போயிடணும் இந்த நரகத்தில இருந்து தப்பி ஓடவேணும் என்ற ஒரே நினைப்பு. "சரி நான் வாறன் இரண்டு குழந்தைகளையும் என்ன செய்யிறது" என்றவளுக்கு. "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதுகளை தூக்கிட்டு வாங்கோ". ஒரு கணம் யோசிச்சவள். குழந்தையை விட்டிச்சென்றாள். அதுகள் அவனிற்கு தண்டனையாய் இருக்கவேணும் என்றதால்.

அவன் வரும் வரை ஒரு மறைவில் இருந்து பார்த்தவள் அவன் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றே விட்டாள். கடைசியாக அந்த மண்ணை அவள் மிரிச்சது அன்று தான். அதன் பின் அவளது பிள்ளைகள் பற்றி அப்பப்ப தகவல்கள் அறிந்த வண்ணம் இருந்தாள். இப்ப அவர்கள் வளர்ந்து பெரிய ஆக்கள், சீலன் வெளிநாடு சென்று விட்டான். அவளை தேடவே இல்லை. அவளை ஓடுகாலி நடத்தை கெட்டவள் என்று பல பெயர் கொண்டு அழைத்தது ஊர். "தினம் தினம் சித்திரவதை செய்த போது யாருமே நெருங்கிப்பார்க்கவில்லை ஒரு வார்த்தை பேசவில்லை இப்ப எல்லாரும் கண்டபடி பேசிறார்கள்" என்று அவள் கதறி அழுதபோது நான் ஆடிப்போய் நின்றேன்.

இத்தோடு அவளது முதல் தாலியின் கொடுமையான வரலாறு முற்றுப்பெற, இரண்டாவது தாலியின் சோக கதை என்னை எதோ செய்தது. சிவா சொன்ன மாதிரியே இருந்தான். சீலனைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசியத கிடையாது. அவன் ஒரு சாரதி. போதும் போதும் என்ற வருமானம் இருவரும் நின்மதியாய் வாழ்ந்தனர். என்ன தான் சந்தோசம் வந்தாலும் ஆனந்தியின் மனம் நடுவழியில் விட்டு வந்த இரு குழந்தைகளை அவள் இன்னும் மறக்கவில்லை, எப்படி மறக்க தொப்பிள் கொடி உறவென்பது சாதாரனமானதா ஒரு நொடியில் மறந்து விட? அவளது துயரம் தெரிஞ்ச சிவா அவளை வற்புறுத்தவில்லை. என்ன தான் இருந்தாலும் அவனது உதவிக்கு அவளால் முடிந்தது சிவாவிற்கும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்தாள் 2 வருடத்தில். வாழ்க்கை பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்கியது. தனிமையான நேரத்தில் மூத்த பிள்ளைகளை எண்ணி அழுவதும் உண்டு. சீவாவின் குழந்தையில் அந்த குழந்தைகளைப்பார்த்தாள்.

விதி மறுபடி விளையாடியது, வாகன விபத்தொன்றில் சிவா உயிர் தவறியது. விதவைக்கோலம். அன்று தான் சீலன் உயிரோடு இருக்க சீவா இறந்து போனான். " நான் விதவையா சுமங்கலியா.?? எனது நிலை எனக்கே தெரியேல்லை" என்று ஆனந்தி சொன்னபோது என்னவோ செய்தது.

ஒரு குழந்தையுடன் இதே வீட்டில் இருந்தாள். சாதாரனமாயே ஒரு ஆணின் உழைப்பில் ஒரு குடும்பம் ஓடுவது கஸ்டம். யாரைத்தெரியும்? என்ன தெரியும்? பட்டினியாய் பல நாள் கிடந்தாள். அயலவர் பரிதாபத்தில் குழந்தை ஒரு நேரம் வயிராறியது. அப்போது தான் சீலணின் தம்பி கண்ணனின் பரிதாபம் ஆனந்தி மேல் விழுந்தது. அவள் கணவனை விட்டு ஓடி வந்தவள் என்பது அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருந்தார்கள். கண்ணன் அவளிற்கு ஆதரவாய் இருந்ததை பலர் பலவாறு பேசினார்கள். பல வருடமாய் அவர்களிற்குள் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. காலம் மாற்றியது, எத்தனை நாள் அவனை எதிர்பார்த்திருப்பது. நேரடியாகவே கேட்டாள், கண்ணன் இனி நீங்கள் எங்களுக்காய் கஸ்டப்படவேண்டாம். நான் திரும்பி ஊருக்கு போறன், என்ன நடந்தாலும் பாக்கிறன். என்ற கண்கலங்கி நிக்க, "நீங்க இனி அங்க போய் என்ன ஆனந்தி செய்யப்போறியள். என்னோட இருந்திடுங்கோ அண்ணாவை மாதிரி இல்லாட்டாலும் உங்களையும் பிள்ளையையும் நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் பட்ட கஸ்டங்களை ஒண்டும் விடாமல் அண்ணா எனக்கு சொல்லியிருக்கிறார்" என்றான். எந்த இலாபமும் இன்றி அவனிடம் எப்படி கடமைப்படுவது. ஒரு துணையின்றி மீதி வாழ்வை எப்படி அவள் கழிப்பது, பல வாறு யோசித்தாள். கடைசியாய் மீண்டும் ஒரு முறை அவனது தாலியையும் ஏற்றுக்கொண்டாள். 2 வருடத்தின் பின்னர் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப்பெற்றெடுத்தாள். வாழ்க்கை ஓடுது கண்ணனுடனும், அவனது குழந்தையுடனும், சீலனின் குழந்தையுடனும். அவளிற்கு 4 குழந்தைகள் 3 கணவன்கள். ஒரு முறை விதவையும் ஆனவள் மறுபடி சுமங்கலி..?? நாளை எப்படி இன்னும் அவளிடம் கேள்விக்குறியே மிச்சம்.

தற்செயலாய் கண்ணனிற்கு ஒன்று நடந்தால் என்ன நிலை என்று கேட்டேன், தலை குனிந்தாள் குற்ற உணர்வோ? "கண்ணன் துணையிருக்க இனியாவது உனது சொந்தக்காலில் நிக்கப்பார். கண்ணீரோடு கதை சொல்லி கறைகளை கரைத்திட முடியாது" என்று கூறிவிட்டு வெளியேறினேன்.

அவள் பற்றி எதை நினைப்பது என்று எனக்கு தோன்றவே இல்லை. பிறப்பிலேயே அவளை முடக்கி விட்ட விதியையா? அவளை கொடுமை செய்த சித்தியையா? சீதனத்திற்காய் அலைந்த சீலணையா? சுயமாய் தனக்கென்றொரு வாழ்வை திடமாய் அமைக்க முடியாது இழுத்தபாட்டிற்கெல்லாம் போக நினைத்த ஆனந்தியையா? யாரைக்குற்றம் சொல்ல?

11 comments:

U.P.Tharsan said...

ம்... நல்லா கவிதைதான் எழுதுவிங்கள் என்று பார்த்தால் நன்றாக கதையும் எழுதுகிறீர்கள். நன்று

கயல்விழி said...

//கவிதைதான் எழுதுவிங்கள் //

கவிதை எழுதினேனா? எங்கே ?

நன்றி தர்சன்

கயல்விழி said...

சந்திரவதானாவின் கருத்து மின்னஞ்சலில் வந்தது இங்கு காட்டப்படவில்லை ஏன் என்று தெரியவில்லை.

கயல்விழி
உங்களது ஒன்பதாவது முடிச்சு கதைக்கு கருத்தெழுத முயன்றேன். முடியவில்லை.
அதுதான் இங்கு எழுதுகிறேன்.

ஒன்பதாவது முடிச்சு நல்ல கதை.
ஒரு பெண் தன்னை தன் எதிர்காலத்தை நிலைநிறுத்திக் கொள்ள திருமணம்தான் ஒரு வழி என நினைப்பவர்க்கு ஒரு படிப்பினையான கதையும் கூட இது. வாழ்வு ஒவ்வாத போது இரண்டாவது மூன்றாவது திருணமணங்கள் தப்பென்றில்லை. வாழ்வுக்கு ஒரே வழி திருமணந்தான் என நினைப்பதுதான் தப்பு. அந்தத் தப்பைத்தான் இக்கதையின் நாயகி ஆனந்தியும் செய்துள்ளாள்.

Vetri Thirumalai said...

கயல்விழி உங்களின் பின்னூட்டம் பார்த்துதான் இந்த பதிவுக்கு வந்தேன். முதலில் பின்னூட்டத்திற்கு நன்றி.

முதலில் இங்கு கல்யாணத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் தங்கையிடம் அவள் படிக்கும் காலத்தில் பலமுறை சொல்லியிருப்பேன் உன் சொந்த காலில் நிற்கவேண்டும் என்று. ஆனால் எதுவுமே காதில் ஏறவில்லை. இப்போது அவளின் மாமியார் வீட்டில் அது லொல்லை இது லொல்லை என்று குத்தல் வேறு. ஒன்றிரண்டு இடத்தில் புரட்சி நடந்தாலும் பெரும்பாலான நிலை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
தமிழநாட்டில் ஊடகங்களும் பெண்கள் வீட்டு வேலைதான் செய்யவேண்டும் என்று மறைமுகமாக, தவறு, நேரிடையாகவே வலியுருத்துகின்றன. அவைகளை இவர்களும் ரசித்து பார்த்துகொண்டிருக்கின்றனர். என்னைப்பொருத்தவரை தமிழ்நட்டில் இந்நிலை மாற இன்னும் குறைந்தது இன்னும் நூறு ஆண்டுகளாவது ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்று மற்றவர்களிடம் போதிப்பதைவிட நாமாவது இதை நம் மனைவி, பிள்ளைகள் என்று நடைமுறைப்படுத்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

கயல்விழி ஒரு அழுத்தமான கதையையும் சொல்லி அதற்கு எளிய வழியையும் காட்டி இருக்கிறிர்கள். தன்னம்பிக்கை, சுய உழைப்பு, சுயசிந்தனை யார் ஒருவரையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடும். 'காசிக்கு போனாலும் கருமம் தொலையவில்லை' என்பார்கள். இந்தக் கதையின் கதாநாயகியின் கதையும் அப்படித்தான் உள்ளது.

யாத்ரீகன் said...

>>சுயமாய் தனக்கென்றொரு வாழ்வை >>திடமாய் அமைக்க முடியாத ஆனந்தி

hm.. palichendra kathai.. kadisi oru vari nachendru sonadhu kathaiyin kaaranathai..

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்ல கதை கயல்விழி.

சொந்தக்காலில் நிற்பதே என்றைக்கும் உதவும். திருமணம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அது நடக்காவிட்டால் வாழ்க்கையே இல்லாதது போன்று எண்ணும் எம்மவர் மனநிலை மாற வேண்டும்.

கயல்விழி said...

வெற்றித்திருமலை, கங்கா , செந்தில் மற்றும் ஷ்ரேயா உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் நன்றிகள்.

உண்மை தான் பெண்கள் தங்கள் சொந்தக்காலில் சுயமாய் நிற்கையில் எதற்கும் எவற்றும் எதிர்பார்க்க தேவை வராது. ஐரோப்பாவில் கூட அனேக தமிழ்ப்பெண்கள் இன்னும் வீட்டில் தான் இருக்கிறார்கள் இந்த நிலை மாறவேண்டும். இனி வருகிற சந்ததிகள் மாற்றியமைக்கலாம்.

வீ. எம் said...

நன்றாக கதை எழுதுகிறீர்கள் ..

Congrats.
Vaazthukkal

V M

கயல்விழி said...

நன்றி வீ.எம்

கயல்விழி said...

இது உண்மைக்கதை வந்தியதேவன். அதை அப்படியே எழுதினேன். இதில் எனது மாற்றம் என்ன இருக்கிறது? :)