Sunday, January 16, 2005

புலிகளின் இரண்டு விமானங்கள்

வன்னியில் புலிகளின் இரண்டு விமானங்களை சிறிலங்கா உளவு விமானம் படம் பிடித்ததாம்! விடுதலைப்புலிகள் வன்னயில் முன்னர் அமைத்த விமான ஓடுபாதையை விட இன்னொரு - புதிய - ஓடுபாதையை தற்போது அமைத்துள்ளார்கள் என்றும் அந்த ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் தரித்து நின்றதை விமானப்படையின் ஆளில்லா விமானம் படம்பிடித்துள்ளது என்றும் இராணுவ வட்டாரங்களில் இந்த வாரம் சுனாமி போல ஒரு அதிர்ச்சித்தகவல் தாக்கியிருக்கிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது - கடந்த புதன்கிழமை வன்னிவான் பரப்புக்கு மேலாகப் பறந்த சிறிலங்கா விமானப்படையின் இஸ்ரேல் தயாரிப்பு ஆளில்லா உளவு விமானம் இரணைமடுக்குளத்துக்கு அண்மையில் புலிகள் புதிய விமான ஓடுபாதையை அமைத்துள்ளதை அவதானித்துள்ளதாக வவுனியாவில் உள்ள விமானத்தின் கட்டளை மையம் இனம்கண்டுள்ளது என்றும் - சரக்கு ஏற்றி இறக்கும் சி-130 விமானமே இந்த ஓடுபாதையில் எந்தப்பிரச்சினையும் இன்றி தரையிறங்கிச் சல்லக்கூடிய வகையில் இந்த விமான ஓடுபாதை வசதியாக அமைக்கப்பட்டடுள்ளது என்றும் - இராணுவத்தினர்க்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விமான ஓடுபாதையில் ஒருவர் ஓட்டக்கூடிய ஆறு ஆசனங்கள் கொண்ட சிறியரக விமானம் தரித்து நின்றதை உளவு விமானம் படம் பிடித்துள்ளதைக் கண்ட படையினர் அதனை மீண்டும் அடுத்த நாள் வியாழக்கிழமை வன்னிவான் பரப்புக்கு மேலாக பறக்கவிட்டுள்ளனர். அப்போது அதே ரகமான ஆனால் உருவத்தில் வேறுபட்ட இன்னொரு விமானமும் அங்கு தரித்து நின்றதை உளவு விமானம் படம்பிடித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடம் விமானம் உள்ள விவகாரம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதியாகிவிட்டதால் இது குறித்து என்ன நடவடிக்கை என்பது தொடர்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி புரிய சிறிலங்காவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவ வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. [Puthinam]

No comments: