Wednesday, January 19, 2005

பலவீனமான இந்தியாவின் இராசதந்திரம் - கே.ரி.கே.

சுனாமியின் தாக்கம் ஓயமுன்பு சுனாமியின் அரசியல் தாக்கத்தொடங்கிவிட்டது. இலங்கை மக்களின் துயரத்திலும் குளிர்காய முயலும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் அரசியல் போட்டியையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவின் கடற்படைக்கப்பல் வருகைக்கு இந்தியா சீற்றம் அடைந்திருப்பதென்பதே கவனிக்கவேண்டிய முக்கிய அரசியலாகும். இதில் பல பக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பலவீனமான இராஜதந்திரத்தையே இப்பகுதியில் பரசீலிப்போம். இலங்கையின் அரசியல் தலைமையையும் ஆட்சியையும் பாதுகாக்கும் பிரயத்தனத்துடன் இந்தியா பல தடவை முயன்றுள்ளது. எல்லாத்தடவையும் இந்தியாவின் தந்திரம் தோற்றேபோனது. ஒருதடவையாவது இந்தியா வென்றதென்று கூறமுடியாது. மாறாக இலங்கையும். இலங்கையின் ஆட்சித் தலைமையுமே வெற்றிபெற்றது. இதனால் இந்தியாவைவிட இலங்கையின் இராஜதந்திரிகள் வென்றவர்கள் என்று அர்த்தமற்றது. மாறா இந்தியாவின் பலவீனத்தை இந்தியாவுக்கு விரோதமான சக்திகள் இலங்கையை வைத்து பலமடைந்ததுடன் இலங்கையை துருப்பு சீட்டாக பயன்படுத்தி இலங்கைக்கான வெற்றியை தமக்குரிய வெற்றியாகவும் மாற்றியுள்ளனர். இதில் இலங்கையும் வென்றுள்ளதுடன் இலங்கையின் பக்கமிருந்த சர்வதேச சக்திகளும் வெற்றியடைந்துள்ளன. இதில் குறிப்பிடவேண்டிய பிரதான சக்தியாக தொழிற்பட்ட இந்திய இராஜதந்திரிகளையும் அதன் ஆலோசகர்களையும் நினைவு கொள்ளுதல் வேண்டும். அதிலும் ஜே.என்.டிக்சித் மிக முக்கியமானவர். இப்பந்தி எழுதும்போது டிச்சித் மாரடைப்பால் இறந்ததாகச் செய்திவந்துள்ளன. தனது இராஜதந்திரத்தின் தோல்வியை கணக்குப் போட்டபோதுதான் மாரடைப்பு ஏற்பட்டதோ தெரியாது. அவ்வாறு கருத வாய்ப்புண்டு. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா வெங்கடேஸ்வரனின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு டிக்சித்தின் ஆலோசனைகளை முன்னிறுத்தி செயல்பட்டது. அதன் பிரதான விளைவை இந்தியா அனுபவித்த பின்பும் தனது தந்திரத்திலோ, கொள்கையிலோ மாற்றம் செய்யவில்லை. மாறாக அதேவகையான கொள்கையை இலங்கை விடத்தில் கையாண்டு இறுதியில் தற்போதைய நிலைக்குள் தத்தளிக்கின்றது. இந்தியா இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்த மறு சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலம் இந்தியாவை இலங்கை அரசியல் தலைமைகள் ஏமாற்றியே உள்ளன. இதனை சற்று விரிவாகவும் ஆழமாகவும் பார்ப்போம். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் ஆட்சிக்குவந்த பல இலங்கை அரசாங்கத்தின் தலைமைகள் புவிசார்-அரசியலை மீறும் வகையில் கணிசமான கொள்கை வகுப்புக்களை வரைந்தனர். குறிப்பாக டி.எஸ்.சேனநாயக்கா, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்க, ரணில்விக்கிரமசிங்க, வரிசையில் சந்திரிகா குமாரதுங்கவும் செயற்பட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவுக்கு விசுவாசம்போல் காட்டிக்கொண்டு மேற்குலத்தை ஆதரிப்பதை தமது கொள்கையாக பின்பற்றியவர்களே மேற்குறிப்பிட்ட அரசியல் தலைமைகளின் போக்காக இருந்தது. ஆனால், இந்திய அரசியல் தலைமைகளோ அவ்வப்போது இலங்கையின் அரசியல் தலைமைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் தமக்கு ஏற்பட்டதுபோல் கருதி செயற்பட்டு சிங்கள தலைமைகளை பாதுகாத்துள்ளனர். குறிப்பாக 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் எழுச்சியை அடக்க தனது இராணுவத்தை நேரடியாக இந்திய அரசியல் தலைமை ஈடுபடுத்தியது. அவ்வாறு இந்தியத்தலைமையின் ஒத்துழைப்போ அனுசரனையோ கிடைக்காத நிலை ஜே.வி.பியின் ஆதிக்கத்தை 1970 களிலேயே சாத்தியப்படுத்தியிருக்கும். அதனை தடுத்து நிறுத்திய இந்திய அரசியல் தலைமைக்கும் இராஜதந்திரத்திற்கும் இலங்கை அதே காலப்பகுதியில் ஏற்பட்ட வங்களாதேஷ் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் பங்களாதேஷை அங்கீகரிக்க பலவருடங்கள் பிற்போட்டிருந்தது. ஒருவகையில் இந்தியாவின் முதுகில் இலங்கை குத்தியது. அப்போது முறுகலும் மிரட்டலும் நடந்ததேயன்றி பெரும் முரண்பாடு வெடிக்கவில்லை. மறுகணம் கச்சதீவு விவகாரத்தை இந்தியா இலங்கைக்குச் சார்பாக மாற்றியது. ஆனால், இலங்கை அப்போது சீனாவுடனும், அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியதாகவும் குறிப்பாக நிக்சனைச சந்தித்து இந்தியாவிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்குமாறு சிறிமாவோ கேட்டதாகவும் தகவல் உண்டு. அப்போது ஏழாவது கடற்படை அட்மிரலுக்கு சிறிமாவோ இராப்போசன விருந்தளித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இவ்வாறே 1987 களில் ஜே.ஆர.ஜெயவர்த்தனா வடக்கில் புலிகளின் தாக்குதலாலும், தெற்கில் ஜே.வி.பியின் தாக்குதலாலும் ஆபத்தான நிலையை அடைந்திருந்தபோது இலங்கை-இந்திய உடன்படிக்கை என்பதன் மூலம் வடக்கில் இந்திய இராணுவத்தை குவித்ததுடன் தெற்குப்பக்கம் எழுச்சியடைந்த ஜே.வி.பியை கட்டுப்படுத்த ஜே.ஆருக்கு உதவியது. ஆனால், அதனை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்திவிட்டு பாதுகாப்புக் கண்டங்களை எல்லாம் தாண்டிவிட்டது. இந்தியாவை துரத்திவிட்டார்கள். இதில் ஜே.ஆரைவிடவும் பிறேமதாச ஒருபடி மேற்சென்று இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற உதவினார். அதாவது இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை பயன்படுத்தி வீசினார்கள். அதேவரிசையிலேயே சந்திரிகா குமரதுங்காவும் செயல்பட்டுவருகிறார். இந்தியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவர் இப்போது இந்தியாவை வீசிவிட்டு மேற்குலகின் உதவியையும் ஒத்துழைப்பையும் நம்பி செயற்பட்டு வருகிறார். இது காலம் காலமாக இந்திய இராஜதந்திரிகளும், கொள்கைவகுப்பாளர்களும் ஏற்படுத்திக்கொண்ட உபாயங்களின் பலவீனங்களாகவே இனங்காணமுடியும். ஒரு காலத்தில் எந்த நெருக்கடியிலும் சிங்களத் தலைமைகளுக்கு முண்டு கொடுத்த இந்திய தலைமைகள் பின்னொருகாலத்தில் இலங்கை சிங்களத்தலைமைகளுக்காக இலங்கைத்தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் தயாரானார். நிரந்தரமான எதிரி யார்? நண்பன் யார்? என்பதை இனமதமொழி கலாசார கூறுகளுக்கூடாக இனங்காணமுடியாத இந்திய தலைமைகள் தமிழர்களை சிங்கள ஆட்சியாளரின் நலன்களுக்காக காட்டிக்கொடுக்கத் தொடங்கியது. அதில் அதிக பங்கெடுத்துக்கொண்டவராக இந்திராகாந்தி காணப்பட்டாலும் அதன் அமுலாக்கத்தை ராஜீவ்காந்தியே ஏற்படுத்திக் காட்டினார். இதன் விளைவை நேரு குடும்பம் மட்டுமல்ல இந்தியத்தேசமே அனுபவிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியா தென் இலங்கையின் ஆட்சிக்காக தமிழர்களை பயன்படுத்தத் திட்டமிட்டது. அது நெருக்கடி தீவிரமாக வளர்ந்த போதே இந்தியா எதிர் கொண்டது. அதுவரை மிதவாத அரசியல் தலைமைகளை முன்நிறுத்தி தனது இலக்கை அடைந்ததுடன் தமிழர்களை சிங்களவர்கள் அழித்தபோது கூட அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. குறிப்பாக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது இந்திய சார்பும் நேருவுடனான நெருக்கமும் தமிழர் மீதான ஆக்கிரமிப்பை சாத்தியப்படுத்தியது. இந்திய தலைமை அப்போதெல்லாம் மௌனமாகி, துதிபாடி, ஒத்திசைந்து பகைக்காது இலங்கைத் தமிழர்களை பகைத்தபோது இந்தியா மௌனம் காத்து பண்டாரநாயக்காவுடன் நட்புறவை பேணியது. இதன் தொடர்ச்சியாகவே இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலங்கள் நீடித்தன. இலங்கைத் தமிழர்களை அழித்தபோதும், தலைமைகளை சிறைச்சாலைகளில் அடைத்து கொலை செய்தபோதும், இந்தியாவுக்கு விரோதமான சக்திகளோடு கொள்கை வகுப்புக்களை மேற்கொண்டபோதும் மௌனமாகிவிட்ட இந்தியா இப்போது சீற்றமடைந்து என்னபயன்? இந்திய ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகமோசமான பின்னடைவாகவே அமெரிக்காவின் வருகை அமைந்துள்ளது. அமெரிக்கத் துருப்புகள் சில வாரங்களில் வெளியேறினாலும், அல்லது சில மாதங்களில் வெளியேறினாலும் இந்திய இராஜதந்திரத்திற்கு நிரந்தரமான பின்னடைவாகவே இது அமையும். தமிழர்களின் தலைமைகளை அழிக்கவும், தமிழ் மக்களின் உறவுகளை கொலை செய்யவும், தமிழருக்கிடையே பகைமைத் தூண்டவும், முரண்பாட்டை வளர்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வரும் இந்தியாவுக்குக் கிடைத்த மிக மோசமான இராஜதந்திர தோல்வியாகும். டிக்சித்தின் மறைவும், அமெரிக்க கடற்படையின் வருகையும் இந்திய இராஜதந்திரத்தின் பலவீனத்தையும், தோல்வியையும் காட்டுகின்றதாகும். டிக்சித் எப்படி இந்திய இராணுவத்தை இலங்கைக்குள் ஊடுருவச்செய்வதில் வெற்றி கண்டாரோ அவ்வளவுக்கு அவரது இராணுவத்தின் மீது அடிவிழும் போது துயரமடைந்திருப்பார். தனது பிழையான கொள்கை வகுப்பால் ஏற்பட்ட தவறை மறைக்க அவர் முயன்றதிலே Assignment Colombo என்பதாகும். அதில் அவர் தனது பிழையை மறைக்க முயன்றதுடன் தனது தோல்வியையும், தனது அஸ்தமனத்தையும் மறை பொருளாகக் காட்டியிருந்தார். எனவே இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாறுதல் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கும். ஈழநாதம்.

2 comments:

Thangamani said...

நல்லபதிவு. நன்றி.

கணேசன், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் அரசியற் துறைகளில் உள்ள சில குறிப்பிட்ட வகுப்பினரின் அபிலாஷைகளையும், அதன் பிறகு இந்திய நலனையும் முன்னிருத்தியே இலங்கைப் பிரச்சனையை இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் அணுகிவந்துள்ளனர். இதில் தமிழக அரசியல்வாதிகளின் ஓட்டு அரசியல், தமிழினதலைவராக தம்மைக்காட்டிக் கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட சாகச நடவடிக்கைகள் தவிர தமிழர் நலன் என்பது இதில் சிறிதும் கிடையாது. இதில் குறிப்பிடப்படும் இந்திய நலனென்பது அமெரிக்காவை அங்கு காலுன்ற விடாமல் செய்வதுதான். இதன்பொருட்டே, இந்தியா தொடர்ந்து இலங்கைப்பிரச்சனையில் தலையிட்டு வந்துள்ளது. இந்திராகாந்தி அம்மையார் கொல்லப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்த இந்திய நலனை முன்னிருத்தி ஈழ அரசு அமைய உதவிருக்கலாம். ஆனால் இந்தியநலனைவிட இந்திய அதிகார/அரசியல் துறையில் இருக்கும் சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுத்து வடிவமைத்த தீட்சித் ராஜதந்திரம் உண்மையிலேயே இந்திய நலனை கடுமையாக பாதிக்கவே செய்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ராஜீவ் படுகொலை, அடுத்தது ஈழத்தமிழர்களின் ஆதரவை இந்தியா இழந்து போலியான நண்பனாக இலங்கையை தக்கவைத்துக்கொண்டது. தற்போது அமெரிக்காவின் வருகை. இவையெல்லாம் இந்தியாவின் இழப்புகள் அல்லவென்றால், நான் ஆச்சர்யமடைவேன்.

கயல்விழி said...

அமெரிக்கா மற்றும் அந்நியப்படைகள் இலங்கையை வந்தடைந்தமை இந்தியாவிற்கு பாதகமல்ல என்று கூற முடியாது. ஆனால் தமிழ் மக்களிற்கு எப்படி இவர்களது செயற்பாடு அமையப்போகிறது என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வல்லரசு ஒன்று ஏற்கனவே தலை குனிந்து சென்றது பலரது குருதி கண்ட பின்னர். இனி என்ன ஆகுமோ..?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.