Thursday, January 20, 2005

'றோவும்" தமிழரின் உரிமைப்போரும் -நீலன்

அண்டத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒருசில நவீன புலனாய்வு அமைப்புகளினுள் 'றோ"வும் (Research and Analyse Wing -RAW) ஒன்றாகத் திகழ்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்காக இந்திய அரசு 1968 இல் 'றோ" அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு இந்தியப்பிரதமரின் நேரடிப்பொறுப்பின் கீழ் புதுடில்லியில் லோதி வீதியிலுள்ள 13 மாடிக்கட்டடத்தை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்திய அரசு ஆரம்ப காலங்களில் 'றோ" விற்கென இரண்டு கோடி (இந்தியப் பணம்) நிதியை பாதீட்டில் ஒதுக்கியது. இன்று ஜயாயிரம் கோடி ரூபாய்களாக பாதீட்டுத்தொகை விரிவடைந்து, ஒரு பலமான நவீன உளவறியும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. தெற்காசியாவைப் பொறுத்தவரையில். சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஸ்தரிப்பு அல்லது பிராந்திய ஆதிக்க முனைப்புக்கள், இந்தியாவின் கேந்திர, பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கும், விஸ்தரிப்பதற்கும் பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது. இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்பும், அயலுறவுக் கொள்கையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. இவைகள் இரண்டும் இணை கோடுகளாக செல்லக்கூடியதாக இருக்கின்றதனால் இவ் விடயங்களில் 'றோ" முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது. 'றோ" சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்தும், இந்திய நலனுக்கு ஏற்ப அயல் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி ஆட்டம் காணச்செய்தும் வருகின்றது. அயல் நாடுகளிலுள்ள இனச்சிக்கலின் ஊடாக அரசியல், இராணுவ, பொருளாதாரத் தளங்களில் சேதாரங்களை உண்டுபண்ணியும், சனநாயகத்திற்கான போராட்டங்கள் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் பின்கதவுக் காரியங்களை 'றோ' செய்தும் வருகின்றது. இந்திய பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை (கிழக்கு பாகிஸ்தான்) பிரித்தெடுப்பதற்கு வங்களாதேச விடுதலை வீரர்களாக முக்தி பாகினிக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. 'றோ" வினது உளவுச்சேவைச் சரித்திரத்திலேயே பாகிஸ்தானை வெற்றி கொண்ட மறைமுக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் ஒரு தனியான, பலமான தேச அரசுப் பண்பை கொண்டிருந்தது. அது 'றோ"வின் புலனாய்வுத் தந்திரோபாயப் பண்பினால் பாகிஸ்தான், வங்களாதேசம் என இரு நாடுகளாக 1971 இல் பிரிந்தன. இந்த புலனாய்வு செயற்பாடுகளுக்குப் பின்னரும் இவ்விரு நாடுகளில் இத்தகைய மறைமுக வேலைகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவி விடவில்லை. அது தனக்குச் சார்பான உளவு வட்டத்துக்குள் நுழைவதற்காக வங்காள தேசத்திலுள்ள மதச் சார்பற்றவர்களுக்கும், இந்து சிறுபான்மையினருக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி இருகின்றது. 'றோ" கழுகுக்கண் கொண்டு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிலுள்ள சின்ட், புன்சாப் பிரிவினரிடையேயுள்ள பல்வேறு இனக்குழுக்கள் கருத்து முரண்பாடுடையவர்கள் மத்தியில் விரிவான உளவு வலையமைப்பை அமைத்துள்ளது. இதனைவிடவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க திறமையான இந்து உறுப்பினர்களை ஆர்.எல்.எஸ் மூலம் ஆள் திரட்டல்களைச் செய்து அவர்களுக்கு உளவுப் பயிற்சிகளை வழங்கிக் களத்தில் இறக்கியுள்ளது. உலகில் வல்லரசுகளின் பல்போட்டியில் சமநிலையேற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படும் உளவுச் செயல்கள் உளவு வரலாற்று ஏடுகளில் தனித்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளின் கைகள் இலங்கைக்குள் உள்நுழைய தொடங்கியதும் இந்தியா இலங்கையை தனது செல்வாக்கினுள் கொண்டுவருவதற்காக ஏனைய வல்லரசுகளைப்போல் தமிழர் தேசிய இனச்சிக்கலை கையாளத்தொடங்கியது. இந்தத் தந்திரோபாயப் பண்பு அடிப்படைக் கொள்கையின் அத்திவாரத்தில் இருந்து கொண்டு 'றோ" தமிழ் இளைஞர்களின் தீவிரவேட்கை உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது. அது உயர்பாதுகாப்பு நிலையங்களான புதுடில்லியிலுள்ள சக்ராட்டாவிலும், மையங்களை உருவாக்கி 'ஜந்து" தமிழ் குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியது. தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் நெருக்கடியை நல்லிணக்கப் போக்குடன் மாத்திரம் அணுகவேண்டிய நியாயம் அல்லது தேவை இருந்தபோதும் 'றோ" இந்திய நலன்களுக்கான உணர்வுகளுடன் அந்த நெருக்கடியை அணுகத்தலைப்பட்டது. இதுவே எல்லாக் குழப்பத்துக்கும் அடிப்படையாக அமைந்தது. தமிழரின் இனச் சிக்கலை சரிவரப் புரிந்துகொள்ளாமல், தொலை நோக்குப் பார்வையெல்லாம் இல்லாம் 'றோ" உயர் குழாமினரின் விருந்து உபசார மேசையில் கதைக்கப்படும் விடயங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துத் திட்டங்களை வகுத்து வருகின்றது. இந்தக் குறுகிய வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஒருவகைப் பண்பு மாற்றமாகத்தான் 'றோ" புலிகள் இயக்கத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன் நோக்கிய வீறு நடையைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னாலான சகலதையும் செய்தது. ஆனாலும் புலிகள் பலம்பெற்றனர். தமிழரின் படையான புலிப்படை பலமாகியபோதே சிங்கள ஆளும் உயர்பீடம் நிலை குலைந்துபோய் இந்திய அரசின் காலடியில் சென்றுவிழுந்தது. புலிகளின் பலத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய வழி வகுத்தது. இந்த யதார்த்த அரசியல் களநிலைவரங்களை பகுத்துணரும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளின் தொடர்ச்சியான போராட்ட வரலாற்று நீட்சி காரணமாக உள்ள தமிழரின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள பின்நிற்பது அல்லது தயங்குவதே கவலையானது. தமிழர் ஒவ்வொரு வீடுகளிலும் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோய் போன்றவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திராகாந்தி இறந்ததும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனது தாயை இழந்தது போலவே சோகத்தினுள் மூழ்கியிருந்தார்கள். இப்படியான தமிழர்களின் நல்லிணக்க உறவு போக்குகளை புரிந்துகொள்ளாது தமிழர்களுக்கு 'றோ" உயர் பீடமும், இந்தியக்கொள்கை வகுக்கும் உயர்பீடமும், இந்திய அரச உயர்பீடமும், துன்பதுயரங்களை கொடுத்து. சிங்கள தேசத்தை மாறி, மாறி ஆட்சிசெய்யும் ஆளும் தரப்பினர் எல்லோரும் இந்திய நலனுக்கு விரோதமான அரசியல், இராணுவ, பொருளாதார கொள்கைகளையே கடைப் பிடித்துவந்துள்ளனர். வருகின்றனர். அதாவது நீல நிறக் கட்சிக்காரங்கள், பச்சைநிறக் கட்சிக்காரங்கள், சிவப்பு நிறக் கட்சிக்காரங்கள் என அனைத்தும் இந்தியாவிற்கு சார்பான போக்குகளைக்கொண்டிருக்கவில்லை என்பதை எந்தொரு ஆய்வுகளையும் செய்யாமலே வெளிப்படையாக 'றோ" உயர் பீடத்தினர் தெரிந்துகொள்ளக்கூடிய விடயம். 87இல் ஜே.ஆர். ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளை இங்கு பார்ப்பதனால் உண்மையொன்று 'றோ'வுக்கு முன்னால் விரிந்து விட்டுச்சென்றுள்ளது. அதாவது இதுவரை காலமும் புலிகளும், சிங்களப் படையினரும் சண்டை பிடித்த போது இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. இப்போது புலிகளையும், இந்தியாவையும் மோத விட்டு சிங்கள தேசம் மத்தியஸ்தம் வகிப்பதாகவும், சிங்களவர் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் சிங்களவரைப் பாதுகாத்து இந்தியர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளேன் என்று சொன்னார். அதற்கு அப்பால் ஜே.ஆர். முன்னால் இந்திய எதிர்ப்புணர்வு மிக்க சிங்களக் கடற்படை தாக்கப்பட்டு உயிர்தப்பிய நிகழ்வு நடந்தது. இப்படியாக சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்புணர:வு ஆழமாகப் புரையோடி இருக்கும் சிங்கள தேசத்தின் இறைமையின் பாதுகாப்பிற்காக 'றோ" உதவ முன் நிற்பது தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் இறைமையின் பாதுகாப்பை அசட்டை செய்வது தமிழருக்கு கவலை தரும் நிகழ்வாகும். 'றோ" தமிழரின் உரிமைப் போரை குறைத்து மதிப்பிடும் மனங்பாங்கையுள்ள முகவர் வட்டத்தினரால் வழங்கப்படும் தகவல்களையும் தமிழரின் உரிமை பற்றி சிங்கள உயர் குழாம் வட்டத்தினரால் திணிக்கப்படும் தகவல்களையும் மிள்பரிசீலனை செய்து தமிழர் தொடர்பான கொள்கை மீளுருவாக்கம் செய்யப்படும்போதே இந்திய அரசு நடுநிலை வகிக்க முடியும். 'றோ'வின் வான் பறப்பியல் ஆய்வு மையம் (Aviation Research Center -ARC) சுறு சுறுப்பாக இயங்குகின்றது. கப்பல்களை கண் காணிக்க 'றோ" அமைப்பின் 2ஆவது பிரிவினர் ஓரிசாவில் டொனியர் (Donier) கடல் கண்காணிப்பு விமானத்தை உபயோகிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இணைப்பு நிலையமொன்றை நிறுவி, இணையம் (Internet) மின்னஞ்சல் (E-mail) செய்மதி வழித் தொலைபேசி (Inmarsat) வழித் தகவல்களை கண்காணித்தும் வருகின்றது. இதுபோன்ற நவீனத்துவ வசதிகளைத் தாங்கிய பலம்மிக்க 'றோ" இந்தியாவினுள் உளவுவேலை செய்யப்படும் எந்தொரு சதுரங்க ஆட்ட நகர்தலையும் முறியடித்து வந்த போதிலும் சிங்கள தேசத்தில் ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் 'றோ"வினால் வெற்றிபெறமுடியவில்லை. சிங்கள தேசம் இந்தியாவோடு இணைந்து நடித்த நாடகத்தின் திரை உயர்த்தி, தனது உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் சிங்கள இறைமைக்கு, குந்தகம் விளைவிக்கும் எந்தொரு தமிழர் சார்புநிலை அரசியல் பணிகளை இந்தியா செய்யாது என்கிற அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நடுநிலை, வகிக்கும் கண்ணோட்டத்தோடு தமிழரின் உரிமைப்போரை அணுகும் அரசியல்பண்போடு தங்களை அர்ப்பணிக்கவேண்டும். அதனை விடுத்து சிங்கள உயர் குழாமோடு ஒட்டி உறவாடித் தகவல்களைப் பெறும் நிரூபமா, நாராயணன், முனி போன்ற 'றோ" உயர்மட்டத்தினரின் ஆலோசனை கேட்கும் பட்சத்தில் இந்திய அரசை மீண்டும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே முடியும். மத்திய கிழக்கு நாடுகளினுள் இஸ்ரேல் தேசம் பலமாக இருப்பதனாலே அமெரிக்கா நலனுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படைக்கொள்கையில் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்து அத்தேசத்தை பலமாக்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பாடத்தை இந்திய வகுப்பாளர்கள் கற்றுக்கொண்டிருந்தபோதிலும் தமிழர் தாயகம் விடயத்தில் 'றோ"வினது தவறான அணுகு முறைப்போக்கை மாற்றியமைக்காது இருப்பது அறிவுபூர்வமான அரசியல் பண்பிலிருந்து விலகி நிற்பதாக அமைகின்றது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தாக்கம் தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சோகமான சூழலில் சிங்களதேசமும், ஆதிக்க சக்திகளும் பூகம்ப அரசிலையப் பயன்படுத்தி தங்களது இராணுவ நலன்களையே முதன்மையாக வேணி வருகின்றது. சிங்கள தேசம் இந்தியாவினது இறைமையைப் பற்றி சிறிதும் சிந்திக்காது இந்திய நலனுக்கு பாதகமான நிலைப்பாட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் இன்றைய பூகம்ப அரசியல் சூழலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழரின் உரிமைப் போரை பலவீனப்படுத்தும் மறைமுக பணிகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவிவிட வேண்டிய நிலை ஒன்று உதயமாகியுள்ளது. தமிழர் உரிமைப் போராட்டம் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்றுவிட்ட அரசியற் சூழ்நிலையிலும், தமிழர் எந்தொரு தீர்வை எட்டாத போதிலும் தமிழர்படை பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தை பலவீனமாகும். 'றோ"வின் உளவுச் செயற்பாடுகளால் தென்னிந்திய பிராந்திய பாதுகாப்பிற்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை. அது தர்மமாகவும் இருக்கப்போவதும் இல்லை. ஆகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொண்டும் தமிழரின் உரிமைப்போரின் நியாயத்தை புரிந்துகொண்டும், தமிழரின் துன்ப துயரங்களை மனிதாபிமானமாக அணுகியும் செயலாற்றக்கூடிய கொள்கைக்கு அத்திவாரம் இடவேண்டும். இதுவே தமிழர் தாயக விடயத்தில் இந்தியாவை நடுநிலைப்படுத்தும். [ஈழநாதம்.]

No comments: