Sunday, February 20, 2005

சுனாமிப் பரீட்சை - நிலாந்தன்.

சுனாமி 2004 ஆசியாவுக்கு அழிவை மட்டும் கொண்டுவரவில்லை அது சில நாடுகளுக்கு சோதனைகளையும் -பரீட்சையையும் வைத்திருக்கிறது. இந்தச் சோதனையில் குறிப்பிட்ட நாடுகள் சித்தி பெறுமா இல்லையா என்பதில்தான் அந்த நாடுகளின் தலைவிதியே தங்கியிருக்கிறது. இந்தோனேசியா இப்பொழுது முதற்கட்டமாக அந்தச் சோதனையை எழுதிக்கொண்டிருக்கிறது. அங்கே அச்சே போராளிகளுக்கும் இந்தோசிய அரசாங்கத்திற்குமிடையில் அண்மையில் பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் முன்னால் பி;ன்லாந்து பிரதமர் மார்ரி அஃரிசாரியின் அனுசரனையுடன் கடந்த மாதக் கடைசியில் மேற்படி பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன. அங்கே ஏற்கனவே இருந்து வந்த ஒரு யுத்தநிறுத்தம் முறிக்கப்பட்டு சண்டைகள் தொடங்கி நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில் சுனாமி அச்சேயைத்தாக்கியது. இப்பொழுது சுனாமியின் பெயரால் அங்கே பேச்சுக்கள் மறுபடியும் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இலங்கைத் தீவிலோ அரசாங்கம் இன்னமும் இந்தச் சோதனையில் அமர்வதற்கே தயாரில்லை. அயலில் உள்ள பேரரசுகள் எதையாவது பிடித்து குதிரை ஓடலாமா என்றே சந்திரிகா சிந்திப்பது போல தெரிகின்றது. யோசனைகள், மாற்று யோசனைகள், திருத்தப்பட்ட யோசனைகள் என்று கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமிடையில் ஹெலிகொப்டர்கள் சலியாது பறந்து கொண்டிருக்கின்றன. அறிக்கைகள், பேட்டிகள், பத்திரியாளர்கள் சந்திப்புக்கள் என்றெல்லாம் சுனாமி அரசியலானது சுனாமிக்கு முன்பிருந்த அலே சலிப்பூட்டும் அருவருப்பான தடத்திற்கே திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது. சுனாமிக்கு முன்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் பெருமளவுக்கு தேங்கி நின்றுவிட்டிருந்த ஒரு சூழலிலும் இப்படித்தான் யோசனைகள், மாற்று யோசனைகள் திருத்தப்பட்ட யோசனைகள் என்று ஹெலிகெப்டர்கள் வீணே பறந்தன. ஒரு கட்டத்தில் மாவீரர் நாள் உரையோடு எல்லாவற்றுக்கும் ஒரு எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. ஆனால் சுனாமி வந்து அந்த எல்லைக்கோட்டை தள்ளிவைத்துவிட்டது. அதே சமயம் சுனாமி, புதிய எல்லைக்கோடுகளை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி சுனாமியின் அகதிகளை மீளக் குடியமரத்துவதற்கும் அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டியொழுப்புவதற்குமாக உடனடியாக ஒரு நிர்வாக பொறிமுறைக்கான கட்டாயத்தை அது கோரி நிற்கிறது. முன்பு யுத்தத்தின் அகதிகளை வரையறையின்றி காத்திருக்க வைத்துக்கொண்டு ஹெலிகெப்டர்கள் வீணே பறந்தன. ஆனால், இப்பொழுது சுனாமியின் அகதிகளை அவ்வாறு காத்திருக்க வைக்கமுடியாது. ஏனெனில் யுத்தத்தின் அகதிகளை விடவும் சுனாமியின் அதிகள் அதிகம் சர்வதேச மயப்பட்டவர்களாகக் காணப்டுகிறார்கள். ஒரு விதத்தில் சர்வதேச சமூகம் அவர்களை தத்தெடுத்துவிட்டது போல ஒரு தோற்றம் உண்டாகியிருக்கிறது. எனவே யுத்தத்தின் அகதிகளைப்போல சுனாமியின் அகதிகளை அநாதைகளாக தனித்துவிட முடியாத ஒரு நிலை. இதனால் சுனாமியின் அகதிகளை பராமரிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்குமான ஒரு நிர்வாகப் பொறிமுறை எனப்படுவது அதிகமதிகம் சர்வதேச மயப்பட்டதாகவே அமைய வேண்டியிருக்கிறது. யுத்தத்தின் அகதிகளுடைய வாழ்வை மீளக்கட்டி எழும்புவதற்காகவே புலிகள் இடைக்கால நிர்வாக ஏற்பாடு ஒன்றை கேட்டு வந்தார்கள். அதை ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்திரிகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச சமூகமும் அது விசயத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் கையாலாகாததாக மாறும் ஒரு நிலை தோன்றிக்கொண்டிருந்த போதே புலிகளின் மாவீரர் நாள் உரை வந்து. இப்பொழுது சுனாமி அரசியலில் அந்த இடைக்கால நிர்வாக ஏற்பாட்டில் பிரேரிக்கப்பட்டிருந்த ஒரு விசயத்தின் மீது- நிதி நிர்வாகத்தின் மீது- அதிக கவனம் குவிக்கப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் சம்பந்தப்பட்ட எல்லாத்தரப்புக்கும் உருவாகியிருக்கிறது. சிறிலாங்காவுக்கு வரும் சுனாமி நிதியில் தமிழர்களுக்குரிய பங்கை எப்படி கையாளுவது என்பதற்கான ஒரு நிர்வாக பொறிமுறை பற்றியே இப்பொழுது யோசிக்கப்படுகிறது. இப்பத்தியில் சில வாரங்களுக்கு முன் கூறப்பட்டது போல அப்படியொரு நிர்வாகப் பொறிமுறை பற்றி சிந்திப்பது என்பது ஒரு இடைக்கால நிர்வாக ஏற்பட்டில் நிதிக் கையாளுகை பற்றி எடுக்கப்படக் கூடிய முடிவுகளுக்கு அடிப்படையாக அமையக்கூடும். அதாவது ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சர்ச்சைக்குரிய சில பகுதிகளைக் குறித்து தீவிரமாக சிந்தித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை சுனாமி கொண்டு வந்திருக்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால்... முன்பு சந்திரிகாவும் ஜே.வி.பியும் எதைக் குறித்துப் பேசத் தயாராக இல்லாமலிருந்தார்களோ அதைப் பற்றி உடனடியாக முடிவெடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் தோன்றியிருக்கிறது என்பதே. ஒரு புறம் அரசாங்கம் தெற்கில் தனது சொந்த சிங்கள மக்களுக்கே ஒரு வினைத்திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியாமல் திணறுகிறது. இன்னொரு புறம் வட-கிழக்கிற்கான ஒரு நிர்வாகப் பொறிமுறைபற்றி அதுவும் எதிர்காலத்தில் எந்த ஒரு இடைக்கால நிர்வாக ஏற்பாட்டிற்கும் கருவாக அமையக்கூடிய ஒரு நிர்வாகப் பொறிமுறைபற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. தெற்கில் சுனாமிக்குப் பிந்திய நிலைமைகளை கையாள்வதற்கு அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கும் நிர்வாகக்கட்டமைப்புகள் அநேகமாக தோல்வியடைந்துவிட்டன என்று கூறப்படுகின்றது. இத்தகைய கட்டமைப்புகளில் ஒன்றிற்கு பொறுப்பாவிருந்தவரும் சந்திரிகாவின் மிக நெருங்கிய சிநேகிதியுமான கலாநிதி தாரா டிமெல் கடந்தகிழமை தனது பொறுப்பை ராஜினாமா செய்ததை இங்கே சுட்டிக்காட்டலாம். இது தவிர சுனாமி உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 30விகிதத்தினருக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திலக் ரணவிராஜ கடந்த கிழமை கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை- 7ஆம் திகதியுடன் இந்த விகிதம் 75ஆக மாற்றப்பட்டு விடவேண்டும் என்று சந்திரிகா கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளாராம். அதாவது தனது சொந்தச் சிங்கள மக்களுக்கே ஒருவினைத்திறன் மிக்க ஒழுங்கான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியாது திணறிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் வட-கிழக்கில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று ஒரு நிர்வாகக்கட்டமைப்பை அதுவும் அதிகம் உணர்ச்சிகரமான ஒன்றை உருவாக்கவேண்டிய ஒர நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது. இது அவர்களைப்பொறுத்தவரை ஒரு சோதனை. அவர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் இது சோதனைத்தான். சிறிலங்காவின் சமாதான முயற்சிகளை விடவும் சிறிலாங்காவின் சுனாமி அரசியல் ஒப்பீட்டளவில் அதிகம் சர்வதேசமயப்பட்டதாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகைய ஒரு பின்னணியில் இது விசயத்தில் அரசாங்கம் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதும், அந்த முடிவு அதிகாரப்பகிர்வின் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும் விதத்தில் அரசாங்கத்தின் மீது செல்வாக்கை அல்லது அழுத்தங்களை பிரயோகிப்பதில் மேற்கு நாடுகள் எத்தகைய வெற்றிகளை பெறக்கூடும் என்பதும் தான் இலங்கைத்தீவின் முழுச்சமாதான முயற்சிகளுக்குமான ஒரு குறிகாட்டியாக அமையப் போகிறது. இப்படிப்பார்த்தால் சுனாமிப்பரீட்சை சிறிலாங்காவிற்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் தான். இந்தப் பரீட்சையில் இரு தரப்பும் பெறப்போகும் பெறுபேறுகளே இனி சமாதானத்தின் மீதான தழர்களின் நம்பிக்கைகளைப் புதுப்பிக்கும். இல்லையென்றால், எதற்கெடுத்தாலும் பேச்சுவார்த்தை என்று சொல்லி முடிவுகளை எடுக்காது பேசிக்கொண்டிருப்பதன் மூலம் ஏதோ பெரிதாக நடக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் ஒரு தந்திரமே இது என்று தமிழர்கள் விரக்திவசப்பட நேரிடும். கடந்த சுமார் மூன்று ஆண்டுகால யுத்தநிறுத்தத்தில் புனிதமிழந்து கொண்டே வரும் விவகாரங்களில் ஒன்று பேச்சு வார்த்தை. எதற்கெடுத்தாலும் பேச்சுவார்த்தை என்று சொல்லி அனுசரனையாளரையும் மினக்கெடுத்தி புலிகளையும் மினக்கெடுத்தி ஊடகக்காரர்களையும் மினக்கெடுத்தி இதன்மூலம் காலத்தைக் கடத்துவதே சந்திரிகாவின் சமாதானத்திற்கான உத்தியாக இருந்து வந்துள்ளது. எதற்கெடுத்தாலும் ஒரு பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தைகளைத் தொடங்;குவதற்கும் ஒரு பேச்சு வார்த்தை. பிறகு புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளைப் பரிசீலிப்பது பற்றிப் பேசுவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை. இப்பொழுது சுனாமி நிதிநிர்வாகக் கட்டமைப்பைப் பற்றிப்பேசுவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை. இப்படியே போனால் பேச்சுவார்த்தை என்ற பொறிமுறை அதன் புனிதத்தை இழந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் போரைத் தொடங்குவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை என்ற ஒரு நிலை வந்தாலும் வரலாம். [ தகவல்- www.sooriyan.com]

No comments: