Tuesday, March 29, 2005

சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார்

சர்வதேச ஆழிப்பேரலை நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே: சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார் இலங்கைத் தீவகத்தில் தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழிப்பேரலையால் தமிழர் தாயகப் பாதிப்பு விவரங்கள் குறித்தும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் தமிழர் உரிமை மையம் முறையீட்டு மனுவை அளித்துள்ளது. ஜெனிவாவில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத் தொடரின் தலைவரான இந்தோனேசிய நாட்டின் ஐ.நா தூதுவர் திரு. மக்கரிம் விப்பிசோனிடம் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயளார் ச. வி. கிருபாகரன் இந்த முறையீட்டு மனுவை அளித்தார். பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டு தமிழர் மனித உரிமைகள் மையம் இயங்கி வருகிறது. ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் தமிழர் மனித உரிமைகள் மையம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகியும் இன்னும் அங்கு எந்தவித சுமுகமான நிலையும் உருவாகவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டது போல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை. இராணுவம் தொடர்ந்தும் மக்களை துன்புறுத்துவதுடன், பாதுகாப்பு வலயம் என்று கூறி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புக்கள் அடங்கிய பல பெரிய பிரதேசங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்க்காலத்தில் இருந்த இராணுவத்தினரை விட பல மடங்கு இராணுவத்தினர் தற்பொழுது உள்ளார்கள். கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் இராணுவத்தின் உதவியுடன் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கூலிப்படைகளினால் அரசியல் படுகொலைகள் தொடர்கின்றன. அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆழிப்பேரலை துயரங்கள் ஓர் மனித உரிமை மீறல் சம்பவம் இல்லாவிடிலும், சிறீலங்கா அரசு இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித மனிதாபிமான உதவியும் செய்யாத காரணத்தால் இது ஒரு மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. தொடர்ந்து சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களோஇ நிதி உதவிகளோ வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை கிடைக்கப்பெறவில்லை. இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களேயாகும். இம் மாவட்டங்களில் உடனடி மீட்பு வேலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செய்தனர். இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் வேறு சில அரசசார்பற்ற நிறுவனங்களினாலுமே நிவாரணங்கள் கொடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசு உண்மைக்குப்புறம்பான தகவல்களுடன் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் அவர்கள் ஆழிப்பேரலை பாதிப்புக்களை நேரில் பார்வையிட சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த பொழுது சிறீலங்கா அரசு கோபி அனானை வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருந்தது. சிறீலங்கா அரசின் இச் செயற்பாடு ஐ.நா சபையின் அதிகாரப்பத்திரத்தின் சாரம் 100ஐ மீறிச் செயற்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். கோபி அனானைத் தொடர்ந்து சிறிலங்கா வந்த பல நாட்டுத் தலைவர்களையும் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது, ஓர் மனிதாபிமானமற்ற செயலாகும். இதேவேளை சிறீலங்கா அரசு பெரும்தொகையான பணத்தைச் செலவழித்து ஆயுதங்களை கொள்வனவு செய்து போருக்குத் தன்னை தயார் செய்கிறது. இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான அனுதாபம் சர்வதேச சமூகத்திற்கு இருந்தபோதும், அதை வெளிப்படையாக காட்டத் தயங்குவது மிகவும் கவலை தரும் விடயம். இதனாலேயே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்கள். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடரினால், இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மக்களைப்போல் சமனாக நடத்தப்படவேண்டும் என்று ஓர் கண்டனம் கொண்டுவருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் நிவாரண உதவிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்ளுமாறும் வேண்டுகிறோம். இத்துடன் அறிக்கைகளும், அட்டவணைகளும், ஒப்பீடுகளும் உங்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி: புதினம் www.puthinam.com

1 comment:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

செய்திகளுக்கு நன்றி.