Wednesday, August 24, 2005

திரைகளில் பெண்கள் இன்னும் பண்டமாய்!

இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன. ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமொடியாக, பாட்டாக , காட்டியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. அதே போல தான் சின்னத்திரையும் நாடகம் போடதா ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டியவிடயம். இப்படி மக்களை பலவகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பலர் பெண்களை நோக்கும் விதம் இன்னும் மாறுபடவில்லை? பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களைப்பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ்ச்சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்ளை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான். அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்? அண்மையில் ஒருபடம் பார்க்ககிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியைக்காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விடையமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பு அந்த பெண்ணின் சம்மதத்தோட நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்யிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் "நீ அவளை எடுத்துக்கோ" என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது படத்தை பாக்க. பல படங்களில் இப்படிப்பட்ட வார்த்தைப்பிரயோகம் பெண்ணை நோக்கிப்பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையைக்காட்டுவதற்கு? இப்படிப்பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க. சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கலியாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்றது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள். இந்த படங்களில் வருகின்ற இன்னொரு விடயம் என்னவென்றால். நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது. "பொம்பளைமாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை. ஒரு படத்தில ஒரு றவுடி கலாட்டா செய்கிறார். அதால ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுறார். இதைப்பாத்த நாயகி கோவம் கொண்டு அந்த றவுடியை பேசிறாங்க. பொலிஸ் வர நாயகன் நாயகியையும் அழைத்துக்கொண்டு விலகிறார். அந்த அம்மா நடந்ததை பொலிஸிற்கு சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படிப்படைக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விடயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு இருக்க முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்.

17 comments:

வீ. எம் said...

எல்லாம் வியாபாரம் கயல்விழி

தாணு said...

`விழி'யில் என் பதிவு விழுந்ததால், இந்த பதிவு என் கண்ணை ஈர்த்தது. பட்டங்கள் ஆண்டாலும் சட்டங்கள் செய்தாலும், ஆணுக்கு பெண் அடிமை என்ற உணர்வு மாறும்வரை எல்லா இடங்கலிலும் பெண்ணின் நிலை இதுதான் கயல்விழி. திரையில் அது இன்னும் மிகைப்படுத்தப்பட்டால்தானே செல்லுபடியாகும்.

Ramya Nageswaran said...

இந்த ஜென்மத்திலே மாறாது கயல்விழி.. தாலி செண்டிமெண்ட், கற்பழிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிறது, மோசமான கணவனுக்காக அடி வாங்கறது, அவமானப்படறது அப்புறம் கடைசியிலே அவன் திருந்தறது... இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

"இப்ப கல்யாணம் நின்னு போச்சுன்னா நாங்க எல்லோரும் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறதை தவிர வேறு வழியில்லை" இந்த டைலாக் நிச்சயம் 50க்கு மேற்பட்ட படத்துலே வந்திருக்கும்னு நான் பெட் கட்ட தயார்.

இதெல்லாம் இல்லைன்னா தழிழ் சினிமா எங்கே??

Ganesh Gopalasubramanian said...

வீ.எம் சொல்வது போல் எல்லாம் வியாபாரம். ஒன்னும் உருப்படியா வர்ற மாதிரி தெரியல.... ஒன்னுமில்லைங்க ஆட்டோகிராஃப்ல நம்ம கோபிகாவோ, ஸ்நேகாவோ மூணு காதலைத் தாண்டி நாலாவதா கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி படம் எடுத்திருந்தா நல்லா "கலக்ஷன்" ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க...... இதெல்லாம் நம்ம மதுரை மல்லி சொல்வது போல் சம்திங் பண்டமெண்டலி ராங்

கலை said...

மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் கயல்விழி. எனக்கும் பல படங்கள், தொலைக் காட்சி நாடகங்களைப் பார்த்தால் இப்படித்தான் தோன்றுகிறது. நிஜத்தில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே புரட்டி புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மக்களை குழப்புவதில் முதலிடம் இவர்களுக்குத்தான். இவற்றைப் பார்க்கும்போது எரிச்சலாக வரும்.

கயல்விழி said...

வீ.எம் , தாணு, றம்யா, கணேஸ் மற்றும் கலை.
உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள்.

வியாபாரம் என்றது சரியாத்தான் இருக்குது போல கிடக்கு
காசைக்கொட்டி எடுக்கிறாங்க காசைக்கட்டிப்பாக்கிறாங்க, எதையாவது உருப்படியா
உறைக்கிறமாதிரிச்சொல்லவேண்டாமா?

றம்யா சொன்னது போல வல்லுறவு கொண்டவனுக்கு மறபடி
அவளை மணம் முடிச்சு வைக்கிறது எத்தனை கொடுமை
இப்படிச்சம்பவங்கள் கிராமத்தில நடக்கிறது தானே என்றார்கள்.
ஆனா அதற்கு தீர்வு சொல்றமாதிரி, உந்த பழைமையைப்போக்கிறமாதிரி
கருத்தை சொல்லலாம் தானே. அதைச்செய்யாமல் அவர்களும்
காட்சிகளை அமைப்பது தான் வேதனை.

றம்யா 50 படங்களா? அதுக்கு மேல வரும் எண்ணித்தான் பாக்கவேணும்.

கயல்விழி said...

நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி.
//Valakkamaaga neengal oru penn eppadi irukka vendum yendru aayiram varudangalukku munbu sonnaargalo adhai ottiyae eludhuvathu pol irukkum. //

என்ன இப்படிச்சொல்லீட்டீங்க. நடைமுறையில காணிறதை எழுதிறேன். அது உங்களுக்கு பழைமை போல தெரிகிறதோ? எப்படியிருந்தாலும் உங்களது நடுநிலையான கருத்துக்கள் ஊக்கம் அழிக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றிகள்.

U.P.Tharsan said...

அருமையான ஒரு பதிவு.

Anonymous said...

விழி உங்கள் கட்டுரை நல்லதொரு விடயத்தை தொட்டுச் செல்கிறது. சமூகத்தில் பலர் பலவிதமான புரட்சிக்கருத்துக்களை முவைக்கின்ற போதும் நடைமுறை வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிறுசிறு விடயங்களுக்குள் தங்களின் கருத்துக்களுக்கு முக்கியம் கொடுத்து வாழ்வதில்லை...! பலர் பலவிதமாக எழுத்தில் முழங்கிவிட்டு சமூகத்துக்கு ஒப்பித்துவிட்டு கருத்தை தங்கள் மனதில் இருந்து தூக்கி வீசிவிட்டு வாழ்வர்..! இங்கு புரட்சிக்காக பார்வைக்காக கருத்து எழுதப்படவில்லை...நடைமுறைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் உங்கள் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள்..! வரவேற்க வேண்டிய விடயம்..!

தமிழகத்தில் பல பெண்ணிலைவாதிகளும் பெண் உரிமை காப்பாளர்களும் மாரிகாலத் தவளைகள் போல மேடைகளில் கூட்டங்களில் அறிக்கைகளில் கத்துகிறார்களே தவிர பெண்கள் எங்கெங்கெல்லாம் இழிவுபடுத்தப்படுகிறார் எப்படி அது நடக்கிறது என்பதை சொல்ல முடியாதவர்களாக அரசியலுக்கும் பணத்துக்கும் செல்வாக்குக்கும் அடிபணிந்து விடுகின்றனர்..! இந்த நிலையில் மக்களாகிய உங்கள் போன்றோரிடம் இருந்து வரும் கருத்தும் எதிர்ப்புமே சினிமா தொடங்கி அரசியல் வரை மாற்றங்களைத் தரமுடியும்...!

உங்கள் கட்டுரையில் நீங்கள் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மட்டும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்... சிறுவர்கள் ஊனமுற்றவர்கள் என்று பலரும் கூட சினிமாவில் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர்..! ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சியா ஒரு சிறுவன் பெப்சி போத்தலுக்கு பெப்சியுடன் சிறுநீரைக் கலந்து விருந்தாளிக்கு கொடுப்பான்...இதை நகைச்சுவைக் காட்சியாக படைத்திருக்கிறார்கள்..அதுபோல் ஊனமுற்றவர்களை வைத்து மனிதப் புற அழகிற்கு தாங்களே ஒரு எடுகோள் இட்டு மனிதர்களை ஏளனம் செய்தலும் தொடர்கிறது..! சமூகத்தில் கல்வி நிலையில் குறைந்தவர்களை தாழ்வுமனப்பான்மைக்கு இட்டுச் செல்லத்தக்க பல காட்சிகளை சினிமாவில் காணலாம்..! ஏன் இவற்றைப் படைக்காமல் சாதாரண நடைமுறையில் கல்விக்கான வாய்ப்பிழந்த ஒருவருக்கு மீள் வாய்ப்பளிக்கும் விதமாக ஒரு காட்சியை ஒழுங்கமைக்கக் கூடாது..! கலிவிக்கான வாய்ப்பை தீர்மானிப்பது மனிதனே தவிர இயற்கையல்ல..! அதை எப்பவும் வழங்கலாம்..இழக்கப்பட்டால் பெறமுடியாததல்ல கல்விக்கான வாய்ப்பு...முயற்சித்தால் அதை அடையலாம் எப்பவும்..! அத்தோடு வேலைப்பாகுபாடு காட்டுதல்...உதாரணத்துக்கு பியோன் என்றால் கீழ்த்தரமாகக் நடத்தப்படுதல்...அது உண்மையாக இருப்பினும் கூட அதை வழமையாக்கக் கூடாது சினிமா மூலம்..! அதை தனி ஒரு கதையாக்கி படமாக்கி மக்களுக்கு காட்டலாம்...சீர்திருத்தம் கோரலாம்..!

இப்படி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் பல மாற்றங்கள் அவசியம்..இதற்கு மக்கள் மனங்கள் மாற வேண்டும்...மக்களின் சமூகப்பார்வை மாற வேண்டும்..! அதற்கு உங்கள் கருத்து உதவினால் பயனே..!

பத்மா அர்விந்த் said...

பெண்களே இன்னமும் என் கணவர் சொல்லாமல் நான் எதையும் சொல்வதில்லை என்று அதை பெருமையாக பேசுவது நடக்கிரது கயல்விழி. சானியாவின் குட்டை பாவாடைக்கு கிடைக்காத விமரிசனமா. யாரேனும் ஒருவராவது, அத்தனை எளிதில் உணர்ச்சி வசப்பட்டு சபலம் கொண்டவராக நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்றூ கேட்டார்களோ? மன்னித்து ஏற்று கொள்ளுங்கள் என்றூ நாயகன் காலில் விழுந்து கதறுவதையும் , கைநீட்டி அடிப்பதையும் கூட சகஜமாக பார்க்கலாம். (உங்கள் பெயர் மிக அழகாக இருக்கிறது. உங்களுக்கு மீன் போல அழகான நீள் விழிகளும் உண்டா?

பத்மா அர்விந்த் said...

மாயோன்: சரியாக எழுதி இருக்கிறீர்கள். முந்தானை முடிச்சு என்ற படத்தில் பல சிறுவர்களை முழு நிர்வாணமாகவும் கோவணத்துடனும் காட்டி இருப்பார்கள். இதை ஏன் child porno என்று எதிர்க்க வில்லை? இதேபோல பெரியோரையும் இழிவான நிலையில் பல படங்களில் சித்தரிக்கிறார்கள்.

பத்மா அர்விந்த் said...

மாயோன்: சரியாக எழுதி இருக்கிறீர்கள். முந்தானை முடிச்சு என்ற படத்தில் பல சிறுவர்களை முழு நிர்வாணமாகவும் கோவணத்துடனும் காட்டி இருப்பார்கள். இதை ஏன் child porno என்று எதிர்க்க வில்லை? இதேபோல பெரியோரையும் இழிவான நிலையில் பல படங்களில் சித்தரிக்கிறார்கள்.

பத்மா அர்விந்த் said...

மாயோன்: சரியாக எழுதி இருக்கிறீர்கள். முந்தானை முடிச்சு என்ற படத்தில் பல சிறுவர்களை முழு நிர்வாணமாகவும் கோவணத்துடனும் காட்டி இருப்பார்கள். இதை ஏன் child porno என்று எதிர்க்க வில்லை? இதேபோல பெரியோரையும் இழிவான நிலையில் பல படங்களில் சித்தரிக்கிறார்கள்.

முத்துகுமரன் said...

நல்ல பதிவு கயல்விழி...

திரை உலகம் ஆணாதிக்கம் நிறைந்த உலகம். ஆதிக்கம் என்பதை வீரம் என்ற பெயரில் முலாம் பூசி விற்பதே அவர்கள் தொழில். அடிப்படையிலேயே பெண்களின் மீது மரியாதையோ, உயரிய எண்ணங்களோ அவர்களுக்குத் துளியும் கிடையாது. பெண் என்பவள் ஆணுக்கு சமமானவள் என்றல்ல ஒரு மானிட பிறவியாக கூட மதிக்காதவர்கள்தான் ஏராளம். அவர்களின் பார்வையில் பெண் என்பவள் இன்பத்தை கொடுக்க கூடிய ஒரு இயந்திரம். தனது சிந்தனை வறட்சிகளைச் சரி செய்ய பெண்களின் சதைகளை தூக்கிப்பிடிப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. பகுத்தறிவுள்ள, சுய அறிவுள்ள, தன்மானத்தை விரும்புகிற பெண்கள் எல்லாம் கெட்டவர்கள்,அடங்காப் பிடாரிகள், மரியாதை தெரியாதவர்கள், திமிர் பிடித்தவர்கள்- அந்த சுய மரியாதை, தன்மானம் எல்லாம் சாகடிக்கப்பட்டு அவள் உயிரற்ற ஒரு இன்ப இயந்தரமாக மட்டும் இருக்கும் சம்மதிப்பவள் தேவதை.. இந்த ஆணாதிக்க சிந்தனைதான் பல திரைத்துறையினர் தங்கள் இணைகளை பற்றி தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பது, அவர்களை வீட்டுச் சிறையில் வைத்திருப்பது, அவர்கள் சிந்தனைகள், எண்ணங்கள் வெளியே தெரியாவண்ணம் முடக்குவது....

ஆனால் வீராவேசமாக பெண்னுரிமை பற்றியும் பெண் விடுதலை பற்றியும் முழங்குவது.

ஆனால் திரைத்துறையிலும் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரைத்துறையில் இயங்கத்தகுதியில்லாதவர்கள் போலவே நடத்தப்படுகிறார்கள்.

Anonymous said...

இயக்குனர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா... இந்த மாதிரி சென்டிமென்ட் போட்டாத்தான் B,C சென்டரில் தாய்குலங்களின் ஓகோபித்த ஆதரவை அள்ள முடியும் என்று...


இவ்ளோ பேசுற பெண்கள் அழுதுகிட்டே மெகா சீரியல் பார்க்குறாங்கனு தெரியல.. :-D

-
செந்தில்/Senthil

G.Ragavan said...

பெண்களே எழுந்து வந்து போராடினால்தான் நிலமை மாறும். அதுவரைக்கும் இப்படித்தான்.

எல்லாம் ஆண்கள் எடுக்கின்ற திரைப்படங்கள். அவரவர் கருத்தை ஆங்காங்கே ஏற்றி விடுவதால் பெண்களை மையப்படுத்துவதில்லை.

Tisai said...

Great words. Appreciate your comments and views over this issue.