Tuesday, January 04, 2005

கேந்திர இராணுவ போட்டி களமாகும் இலங்கை...?

சுனாமியின் தாக்கம் இந்நாட்டின் இனப்பிரச்சினையையும் சமாதான முயற்சிகளையும் இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டுள்ள அதே வேளையில் கேந்திர ரீதியாக அக்கறையுள்ள சில நிகழ்வுகள் அனர்த்தத்தின் மறைவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கவனிக்காமலிருக்க முடியவில்லை. இலங்கையில் நடைபெற்றுள்ள அனர்த்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தமது கேந்திர நோக்கங்களை அடைவதற்கு சக்திவாய்ந்த நாடுகள் சில மேற்கொண்டுவரும் முயற்சிகள் பிராந்திய இராணுவச் சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தன்னுடைய கேந்திர நலன்களின் அடிப்படையில் இலங்கை மீது அமெரிக்கா நீண்ட காலமாகவே ஹகண்' வைத்திருந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் நெருக்கடிகளின் மத்தியில் - இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கு வாய்ப்பான தளம் ஒன்றை அமெரிக்கா நீண்ட காலமாகத் தேடி வந்துள்ளது. அந்த வகையில் இலங்கை தான் அமெரிக்காவின் விருப்புக்குரிய இடமாக இருந்து வந்திருக்கின்றது. இருந்த போதிலும் இதற்கு நீண்டகாலமாகத் தடைபோட்டு வந்திருப்பது இந்தியா தான்! உபகண்டப் பிராந்தியத்தில் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாகவே இருந்து வருகிறது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை இதனைத் தெளிவாகவே பிரதிபலித்தது? இப்போது கடல்கோளினால் பேரழிவு ஒன்றை நாடு சந்தித்துள்ள நிலையில் - உதவி என்ற பெயரில் பெருந்தொகையான அமெரிக்கத் துருப்புகள் இலங்கைக்குள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அமெரிக்காவிலிருந்து வந்து சேரவுள்ள சுமார் இரண்டாயிரம் விஷேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் முகாம்களை அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேட யுத்தக் கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்றவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்குப் பணி எனக் கூறிக்கொண்டு வருகை தரும் அமெரிக்கப் படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவும் எனவும் யாழ்ப்பாணத்துக்கான விஷேட அமெரிக்க படைப் பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இவர்கள் நாகர்கோவில் பருத்தித்துறை உட்பட கரையோரப் பகுதிகளில் குழுக்களாகச் செயற்படுவார்கள் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையைத் தாக்கிய கடற்கோளைப் பொறுத்தவரையில் மீட்புப் பணிகள் அநேகமாகப் பூர்த்தியாகிவிட்டன. அடுத்த கட்டமாக இருப்பது அனைத்தையும் இழந்து அகதிகளானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதும் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் விஷேட படை அணிகள் இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளிலோ அல்லது மீள்குடியேற்ற முயற்சிகளிலோ எந்தளவுக்கு உதவப் போகின்றன!? மீட்பு நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவது தான் வழமை! ஆனால் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் படையினரை அமெரிக்கா அனுப்பிவைப்பது இயல்பாகவே சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுதான்! இந்தச் சந்தேகம் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனால் தான் அமெரிக்காவுக்கு மறைமுகமான அச்சுறுத்தலைக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா உடனடியாக பத்துக்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக் கடற்படையும் தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க பிரசன்னத்துக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை இதன் மூலம் இந்தியா தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இலங்கை அமெரிக்க செல்வாக்குக்கு அதிகளவில் உட்படுவது தன்னுடைய கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் என்றே இந்தியா கருதுகின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்க நிலைக்கு இது சவாலாக அமைந்துவிடலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. அமெரிக்காவை விட பாகிஸ்தானின் உதவிகளும் அதிகளவுக்கு வருவது இந்தியாவை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக எனக் கூறி இரண்டு கடற்படைக் கப்பல்களையும் இரு சி- 130 ரக ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களையும் அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கின்றது. தன்னுடைய நடவடிக்கைகள் மனிதாபிமான நோக்கத்தைக் கொண்டவையே என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைச் சந்தேகக் கண்களுடனேயே இந்தியா பார்க்கும் என்பது வெளிப்படை! சமாதானத்தை முன்னகர்த்த முடியாமல் இக்கட்டான நிலைமையிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்விதம் கேந்திர இராணுவப் போட்டியின் ஒரு தளமாக இலங்கையை மாற்றியமைக்க ஏன் முற்பட்டிருக்கின்றார்? கடல்கோளினால் ஏற்பட்ட அனர்த்தம் யுத்தத்துக்கான உடனடிச் சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிட்டது என ஜனாதிபதி சந்திரிகா கடந்த வாரத்தில் கூறியிருந்தார். இந்த அனர்த்தம் படைகளையும் பெரிதாகப் பாதித்துள்ளது என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் வெளிநாட்டுத் துருப்புகளை கேந்திர இடங்களில் முகாமிட அனுமதிப்பதன் மூலம்இ எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைப் பெருமளவுக்குத் தடுக்கக் கூடியதாக இருக்கும் என்ற ஒரு கருத்து சிங்கள இனவாதிகள் மத்தியில் உள்ளதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாடாகத்தான் அமெரிக்க இந்தியத் துருப்புகளுக்கு இப்போது செங்கம்பளம் விரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றது! அவலங்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் இந்த அணுகுமுறைகள்இ கேந்திர இராணுவப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றப் போகின்றது. குறுகிய கால அரசியல் நலன்களின் அடிப்படையில் இதற்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டுவது நீண்ட கால அடிப்படையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்! இன்றைய நிலையில் அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு எவ்வாறான உதவிகள் தேவையாகவுள்ளன என்பதை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். குறுகிய நலன்களைக் கருதி ஏகாதிபத்திய நாடுகளின் நோக்கங்களுக்கு இரையாகக் கூடாது! [ நன்றி: தினக்குரல்]

5 comments:

ROSAVASANTH said...

இது மிகவும் கவலைக்குரிய விடயம்தான். எந்த அளவிற்கு இது ஆபத்தானது என்று உடனே சொல்லமுடியவில்லை, என்றாலும் அமேரிக்க வராலாறு அறிந்த யாருக்கும் இந்த சந்தேக கண் கொண்டு பார்க்காமல் இருக்கமுடியாது. எவ்வளவு ஆபத்து என்பதை காலம் சொல்லும்.

சுந்தரவடிவேல் said...

http://news.scotsman.com/latest.cfm?id=3957738

Anonymous said...

ஏது எப்படியோ வல்லரசுகள் தங்கள் பலப்பரீட்சையை காட்ட வெளிக்கிட்டால். ரத்தம் சிந்தப்போறது ஒன்றும் அறியாத மக்கள் தான். என்ன என்ன திட்டங்களை நிறைவேற்ற வைத்திருக்கிறார்களோ? காலம் தான் இனி பதில் சொல்ல வேணும்? நன்றி சுந்தர் உங்கள் இணைப்பிற்கு

என்றும் அன்புடன்
கயல்விழி

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

இது உண்மையிலேயே ஊன்றி கவனிக்கப் பட வேண்டிய விவகாரம். பெரிய அண்ணன் (USA) எப்பொழுது துரும்பு கிடைக்கும் என்று காத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே!!

இளங்கோ-டிசே said...

Related to this topic:
http://www.audio.sen-media.com/vot/kp20050103.smil
(in audio)